7 கோடி கப்பம் கேட்டு மாணவன் கடத்தல்; ‘நாடகம்’ என சந்தேகம்!
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் தங்கொட்டுவ, கோனவில பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 7 கோடி ரூபா கப்பம் கோரப்பட்ட குறித்த சம்பவம் ஒரு நாடகமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இரு 19 வயது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த இருவரும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவனின் நண்பர்கள் எனவும் பரீட்சையைக் கைவிடவும் பெற்றோரிடம் பணம் பறிக்கவும் மூவரும் இணைந்து செய்த நாடகமெனத் தாம் சந்தேகிப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு தமது புதல்வர் வெள்ளைவேனில் கடத்தப்பட்டதாகவும் 7 கோடியோ எழுபத்தையாயிரம் கப்பம் கோரப்பட்டதாகவும் காணாமல் போன மாணவனின் பெற்றோர் பொலிசில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.