அலெப்போ: மீண்டும் பொது மக்கள் வெளியேற அனுமதி
சிரியா, கிழக்கு அலெப்போவை கிளர்ச்சியாளர்களிடமிருந்து சிரிய அரசாங்கம் மீளக் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்து பொதுமக்களும் கிளர்ச்சியாளாகளும் புதன் கிழமை காலை வெளியேற அனுமதிக்க உருவான இணக்கப்பாடு மீறப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இன்று சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக கிளர்ச்சிப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எனினும், அரசு தரப்பிலிருந்து இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லையென்பதோடு நேற்றைய இணக்கப்பாடும் கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதலாலேயே முடிவுக்கு வந்ததாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.
2012 முதல் சிரியாவில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகின்ற நிலையில் மேற்குலகம் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவளித்து வருகின்றமையும் ரஷ்யா சிரிய அரசுக்கு ஆதரவளித்து வான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ரஷ்ய தலையீட்டின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களில் சிரிய அதிபர் அஸாத்தின் இராணுவம் பாரிய முன்னேற்றத்தைக் கண்டு வரும் அதேவேளை மேற்கு நாடுகள் தமது தலையீட்டைக் குறைத்துக்கொண்டுள்ளமையும் நான்கு லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதது.