நல்லாட்சியின் இரு வருடமும் சிறுபான்மையினரும் முள்ளிநியூஸ்

நல்லாட்சியின் இரு வருடமும் சிறுபான்மையினரும்


மனிதனாகப் பிறந்த ஒவ்வொரும் எதிர்பார்ப்புடனும் இலக்குடனுமே நிகழ்காலத்தை எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். சமூக வாழ்வோடு இணைந்த ஒவ்வொரு விடயத்திலும் ஓர் இலக்கும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருப்பது இன்றியமையாதது. அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அரசியலிலும் ஆளும் அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் இருக்கிறது.

ஒரு சமூகக் கட்டமைப்பின் விருத்தியில் அரசியல் அதிகாரம் முக்கியமானது. ஒரு சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும்போதுதான் அச்சமூகத்தின் சமூகக் கூறுகள் விருத்தி காண்கின்றன. அந்த விருத்திக்கு பக்கபலமாக இருப்பது அரசியல் அதிகாரமாகும். அந்த அதிகாரத்தை வழங்குவது மக்களாகும். அதிகாரத்திற்கான ஆணையை மக்கள் வழங்குவதற்குள்ள மூலமே தேர்தலாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என பிரதான தேர்தல்கள் ஐந்து வருடத்திற்கொருமுறை நடைபெறுகின்றன. இத்தேர்தல்களினூடாக ஜனாதிபதியும், பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் மாகாணசபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பிற்பாடு காலத்திற்குக் காலம் பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்தல்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களினால் பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மக்களும் வாக்குறுதிகளை நம்பி பல எதிர்பார்ப்புக்களோடு தமது ஆணையை வழங்குகின்றனர்.

மக்கள் வழங்கும் ஆணையின் மூலம் அரசியல் அதிகாரத்தை பெறுகின்றவர்களினால் மக்களின் ஆணைக்கான எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள் நிறைவேற்றப்படுகிறதோ இல்லையோ அந்த ஆணையைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்து கொள்கின்றவர்களின் இலக்குகள், அவர்களின் நம்பிக்கைகள் நிறைவு பெறுகின்றன. மக்களின் வாக்குகளைப் பெற்று மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாத, மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்த அரசியல் கலாசாரமே கடந்த பல தசாப்த காலமாக இந்நாட்டில் நிலை கொண்டுள்ளது.

ஆட்சியும் அதிகாரமும்

பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களினால் ஒரே விதமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அதிகாரத்தில் உள்ளவர்களின் பொறுப்பாகும். ஆனால், கடந்த காலங்களில் இந்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களினால் இந்நாட்டின் ஒரு அங்கமாகவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வேற்றுமையற்ற மனோநிலையில் அரவணைக்கப்படவில்லை என்ற மனப்பதிவு இம்மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஏறக்குறைய 60 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் உரிமைகள் விடயத்தில் ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்பட்ட போது அதற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் பயனளிக்காத நிலையில,; அப்போராட்டங்கள் பின்னரான காலத்தில் ஆயுதப்போராட்டமாக மாற்றமடைந்தது. அவையும் தோல்வி கண்டநிலையில,; தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பற்கான சாத்வீகப் போராட்டங்கள் மீண்டும் பல்வேறு தளங்களியிருந்தும்; வலுப்பெறத் தொடங்கியிருப்பதைக் காணமுடிகிறது.

இருப்பினும், இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினையில் அல்லது மக்களையும் மக்களின் சொத்துக்களையும் துவசம் செய்த மூன்று தசாப்த காலப் போர் சூழலின் பங்காளிகளாக தமிழ் மக்கள் காணப்படுகின்றபோதிலும், தமிழ் பேசும் மற்றுமொரு சமூகமான முஸ்லிம்களும் பங்காளிகளாக இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில்; முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்திலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதையும், அறிக்கைககள் சமர்ப்பிக்கப்படுவதையும் சாத்வீகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

இந்நாட்டில் இனப்பிரச்சினையும், இனப்புரிந்துணர்வின்மையும் ஏற்படக் காரணமாக இருந்தது ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்களேயன்றி மக்கள் அல்ல. அவர்களின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தாங்கள் பிரநிதித்துவப்படுத்தும்; சமூகத்தின் மத்தியில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக மக்கள் அரசியல்வாதிகளால்; ஏவிடப்பட்டு இனப்பிரச்சினையை எரிய வைத்தார்கள், இன முரண்பாடுகளை உருவாக்கினார்கள் என்பதே நிதர்சனமாகும்.

பெரும்பான்மை ஆட்சியாளர்களும் வாக்குறுதிகளும்

சுதந்திரம் அடைந்தது முதல் 1989ஆம் ஆண்டு வரையான காலம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஓரிரு ஆதரவுக் கட்சிகளின் அனுசரணையுடன் மாறி மாறி ஆட்சி செய்தாலும், இவ்விரு கட்சிகளினதும் ஆளுமையே ஆட்சிக்குள் கையோங்கியிருந்தது. இருப்பினும், இலங்கiயின் அரசியல் வரலாற்றில் குறிப்பாக 1989களின் பிற்பாடு பெரும்பான்மையினக் கட்சிகளின் ஆட்சி என்ற நிலை மாற்றப்பட்டது. சிறுபான்மைக் கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவுடனான அரசாங்கம் என்ற நிலை உருவானது.

அந்த ஆட்சியமைப்பே இந்த 8வது பாராளுமன்ற ஆட்சியிலும் தொடர்கிறது, இருப்பினும் 8வது பாராளுமன்ற ஆட்சியானது கடந்த காலங்களில் இ;டம்பெற்ற கூட்டாச்சியிலும் பார்க்க, ஒரு படி மேல் சென்று இந்நாட்டின் இருபெரும் பெரும்பான்மை கட்சிகளின் கூட்டிணைப்பினாலும் இதர சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் உருவான தேசிய அரசாங்கமாக விளங்குகிறது.

ஓன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கைகள் இவ்விரு பெரும்பான்மைக் கட்சிக்குள்ளும் காணப்பட்டாலும், அரசமைப்பதில் ஒன்றுமை ஏற்பட்டது. இரு பெரும்பான்மை கட்சிகளின் கூட்டினால் உருவான தேசிய அரசாங்கத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் சகல இனங்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்நாட்டை நேசிக்கின்ற பெரும்பான்மை இன மக்கள் மத்தியிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையேயும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் உருவாகியது. ஏனெனில், நல்லாட்சி என்ற பெயரில் உருவாhன தேசிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அந்த

எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வலுவூட்டியது

2015 ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலினூடாக 5,768,090 – 47.58 வீத வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து 6,217,162 – 51.28 வீத வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன பொது எதிர்கட்சிகளின் சார்பில் .நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றாh.;. தேர்தல் காலத்தில் அளி;க்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம், பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதோடு, அமைச்சரவை நியமனமும் இடம்பெற்று நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படும் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது என்பது அறிந்த விடயங்களாகும்.

புதிய அரசாங்கத்தின் மூலம் இந்நாட்டுக்கு நல்லவை பல நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில உருவானது. ஏனெனில், தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துதல், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவருதல், அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்தல், தகவல் அறியும் சட்ட மூலத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன.

இருப்பினும், மக்களின் பெரும் எதிர்பார்ப்புடன் உருவான தேசிய அரசாங்கத்தின் அந்த 100 நாள் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சில நிறைவேற்றப்பட்ட போதிலும் பலவற்றினாலான மக்கள் நம்பிக்கை உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், அதனூடாக அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உருவாகியமையும் மக்களின் நம்பிக்கையில் கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் வவுனியாவில் பொருளதார மையம், கொழும்பில் நிதி கேந்திர மையம், யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பூங்கா, 2016 ஜனவரியிலிருந்து இலத்திரனியல் அடையாளா அட்டை, கடனட்டைகளுக்கான முத்திரை தீர்வுக் குறைப்பு, கிராம சேவகர் பிரிவுக்கு 1500 மில்லியன், மலையக வீடமைப்புக்கு 1000 மில்லியன், வருமானம் குறைந்தோருக்கு 100,000 வீடுகள், அரச ஊழியர்களுக்கு 150,000 வீடுகள், சமையல் எரிவாயு உட்பட 11 பொருட்களின் விலைக்குறைப்பு, கல்வித்துறைக்காக 90,000 மில்லியன், உயர்தரத்திற்கு பின்னர் தொழிற்பயிற்சிக் கட்டணம், பல்கலைக மாணவர்களுக்கு மடிக் கணினி பெறக் கடன், புத்தகம், சஞ்சிகை இறக்குமதி வரி நீக்கம், கட்டடிடத்துறையில் பயிற்சி பெறுவோருக்கு 10,000 ரூபா போன்ற அறிவிப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார ரீதியாகக் காணப்படும் வித்தியாசம் 2020ஆம் ஆண்டளவில் சீர் செய்யப்படும். மீன்பிடித்துறை அபிவிருத்திக்காக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, கல்வி அபிவிருத்திக்காக மேலதிகமாக 17,840 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

175,000 உயர்தர மாணவர்கள் மற்றும் 28,000 ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி வழங்குதல், விஷேட தேவையுடைய சிறார்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 150 ரூபா அதிகரிப்பு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, சிறிய மற்றும் நடுத்தவர்க்கத்திற்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கத் திட்டம், தோட்ட தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டம், வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகள் அமைக்க 5000 மில்லியன் ஒதுக்கீடு, 15 ஆண்டுகளுக்கு மேலாக அரச வீடுகளில் தங்கியிருப்போருக்கு அந்த வீடுகளில் தொடர்ந்தும் வசிக்க வாய்ப்பு வழங்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளன.

இவ்வாறு, 2016, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிவிப்புக்களில் முன்வைக்கப்பட்டுள்;ள சமூக, பொருளாதா அபிவிருத்தி தொடர்பான முன்மொழிகளையும் வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்தியமையிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பல்வேறு சலசலப்புக்களையும் எதிர்மறைக் கருத்துக்களையும் இத்தேசிய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.

அண்மைக்காலமாக இடம்பெற்ற போராட்ட வடிவங்களினூடாக இவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. எந்தளவுக்கு இம்முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இவ்விரு வருட காலத்தில் சிறுபான்மை சமூகம் தொடர்பில் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிறுபான்மை மக்கள்pன் நம்பிக்கையில் உறுதியற்ற நிலைப்பாட்டை தோற்றுவித்திருப்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

நல்லாட்சியின் இரு வருடமும் சிறுபான்மையினரும்

தேசிய அரசாங்கம் பதவி ஏற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரு வருடங்கள் பூர்த்தியாகிறது. தேசிய அரசாங்கம் பதவியேற்றது முதல் இன்று வரை கடந்த 30 வருடக்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? இந்நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்கு கரம்கொடுத்த மலையக மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்ற கேள்விகளும் பரவலாக எழுப்பப்படுகிறது.

குறிப்பாக இந்நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு தடையாகச் செயற்படும் பெரும்பான்மை மதவாத கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் பராமுகமாக இந்நல்லாட்சி அரசாங்கம் செயற்படுவதும் அச்சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்நல்லாட்சியிலுள்ள சில அமைச்சர்களின் நடவடிக்கைள் அமையப்பெறுவதும்; சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மாத்;திரமின்றி தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்தோடு, இந்நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தவரையில் வீணடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. திருப்தியளிப்பதாகத் தெரியவில்லை.

இதேநேரத்தில், வடக்கில் இராணுவத்தினரால் கையப்படுத்தி வைத்திருந்த மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை, வடக்கு கிழக்கில் ஆளுனர் மாற்றப்பட்டமை, தமிழ்மொழியில் தேசிய கீதம் இசைக்க வழிவிட்டமை, மலையகத்தில் 7 பேர்ஜ் காணியுடன் தனி வீடுகள் கட்டிதரப்படும் என்ற திட்டம் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டுள்ளமை போன்ற நடவடிக்கைகள் ஓரளவு சிறுபான்மை மக்கள் மத்தியில் இந்த தேசிய அரசாங்கம் தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றபோதிலும், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பெரும்பான்மை கட்சி அரசியலிருந்து வரும் கருத்துக்கள் சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக் கீற்றை ஒளியிழக்கச் செய்துள்ளதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

கடந்த அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப்போக்கு, அதிகார துஷ்பிரயோகம், சட்டவிரோதச் செயற்பாடுகள், ஊழல்மோசடிகள், அநியாயச் செலவுகள் உள்ளிட்ட அநாவசிய விடயங்களுக்கு இந்த நல்லாட்சியின் இரு வருட காலத்திற்குள் ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள போதிலும,; சிறுபான்மை மக்களின் மனங்களை முழுமையாக வெற்றிகொள்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இதய சுத்தியுடன் முன்னெடுக்கப்படவில்லை என்ற சிறூன்மை மக்களின் உள வெளிப்பாடை மறுதளிக்க முடியாது.

ஆகையால், இந்நல்லாட்சிக்குச் கைகோர்த்த வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களின் மனங்களை வெற்றிகொள்ளும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் நீண்டகாலத் தேவைகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். தேசிய நல்லிணக்க சபை, ஜனாதிபதி செயலணி போன்றவற்றின் செயற்பாடுகளில் பேரினவாத கடும்போக்காளர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குவதைத் தவிர்த்து, சகல இன மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கான நல்லிணக்க செயற்பாடுகளை இந்த அரசாங்கம் எஞ்சிய காலங்களில் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையும் சட்டமும் நீதியும் சகலருக்கு சமம் என்ற தத்துவத்துக்கு இந்த நல்லாட்சியில் மதிப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் கட்டியெழுப்பப்படுவது அவசியமாகும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எட்டப்பட வேண்டும். அதனூடாக சகல மக்களினதும் உரிமைகள் மதிக்கப்பட்டு நல்லிணக்கத்துடனும் சகவாழ்வுடனும் வாழும் சூழல் இந்நாட்டில் உருவாக்கப்படும்; என்ற எதிர்கால நம்பிக்கையினுடனான எதிர்பார்ப்புக்களோடு வடக்கு கிழக்கு மற்றும் மலையக உட்பட இந்நாட்டில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் இந்த நல்லாட்சியை இன்னும் விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விசுவாசத்துடனான நம்பிக்கைக்கு எதிர்காலமே பதில் சொல்லும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW