'விரும்பத்தகாத சம்பவம்' அமைச்சிலிருந்து வெளியேறிய றிசாத் முள்ளிநியூஸ்

'விரும்பத்தகாத சம்பவம்' அமைச்சிலிருந்து வெளியேறிய றிசாத்


அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வர்த்தக கைத்தொழில் அமைச்சில் நேற்று ஏற்படவிருந்த விரும்பத்தகாத சம்பவம் ஒன்றை தடுக்கும் வகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அமைச்சில் பதவி வகிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில சிங்கள உயர்மட்ட அதிகாரிகள் அங்கு கடமையாற்றும் சாதாரண ஊழியர்களை இனவாத ரீதியில் தூண்டிவிட்டு அமைச்சில் குழப்பத்தையும் அசாதாரண நிலைமைகளையும் தோற்றுவிக்க முயற்சித்த போதே ரிஷாத் பதியுதீன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று (05) கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள கைத்தொழில், வர்த்தக அமைச்சில் தனது அமைச்சை சேர்ந்த அதிகாரி ஒருவரின் அறையை அதே கட்டடத் தொகுதியில் மற்றொரு இடத்துக்கு மாற்றுவதற்கு அமைச்சர் ரிஷாத் முயற்சித்துள்ளார். (அது அவருக்குள்ள அதிகாரம்) இதனை ஆட்சேபித்த குறித்த அதிகாரி இந்த விடயத்தை இனவாதமாக மாற்றியும் அங்கு கடமை புரியும் ஊழியர்களை பிழையாக வழி நடத்தியும் அவர்கள் ஊடாக அமைச்சருக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சித்துள்ளார். இந்த நிலைமைகளைப் புரிந்து கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஊடகப் பிரிவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவரைத் தொடா்பு கொண்டு நான் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது,

“கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரின் அறையை மாற்றுவதற்கு அமைச்சர் தீர்மானித்தார். இதனை ஆட்சேபித்த குறித்த அதிகாரி, மேலும் சில சிங்கள அதிகாரிகளுடன் ஒண்றினைந்து அங்குள்ள சாதாரண ஊழியர்களை இன ரீதியாக தூண்டி விட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சித்தார்.

இதனையடுத்து அங்குள்ள ஊழியர்களில் பலர் ஒன்றிணைந்து, குறித்த அதிகாரியின் அறையை மாற்ற முடியாது என அமைச்சரிடம் தெரிவித்து அங்கு அசாதாரண நிலைமைகளை இனவாத ரீதியில் தோற்றுவிக்க முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது ஊடகப் பிரிவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

அமைச்சர் ரிஷாத் அமைச்சிலிருந்து வெளியேறும் போது இவ்வாறு தெரிவித்தார்.

“ உங்களது விருப்பப்படி என்னால் நடந்து கொள்ள முடியாது.. நான் சதொச கட்டடத் தொகுதிக்குச் செல்கிறேன். தேவையிருந்தால் அங்கு வந்து என்னைச் சந்திகலாம்” என அதிகாரிகளையும் ஊழியர்களையும் நோக்கி கடுமையாக தெரிவித்து விட்டே வெளியேறினார்

பின்னர் அவர் கொழும்பு வொக்க்ஷோல் வீதியிலுள்ள சதொச கட்டடத் தொகுதியின் 8 ஆவது மாடியை தனது உத்தியோக அலுவலகமாக மாற்றிக் கொண்டதுடன் ஊடகப் பிரவுக்கு அதே கட்டடத் தொகுதியின் 9 ஆவது மாடியை ஒதுக்கியுள்ளார்” என கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW