இணையம் மூலம் வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறும் வசதி அறிமுகம் முள்ளிநியூஸ்

இணையம் மூலம் வாகன வரி அனுமதிப்பத்திரம் பெறும் வசதி அறிமுகம்


இலங்கையை இணையம் மூலம் இணைக்கும் ICTA இலங்கையின் இலத்திரனியல் செயல்திட்டத்தின் கீழ் (e Sri Lanka) இதுவரை பல விடையதானங்கள் இணைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டுவரும் இந்த வேளையில் இதுவரை இலங்கையின் 08 மாகாணங்களிலும் இணையம் மூலம் வாகன வருமானவரி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயல்திட்டம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதனடிப்படையில் வடக்கு மாகாணத்திலும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலமாக வடக்கின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் குறித்த இணையம் மூலமான சேவையினை உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் வைபவம் கடந்த திங்கட்கிழமை(23) காலை 10 மணியளவில் யாழ் நூலக மாநாடு மண்டபத்தில் இடம்பெற்றது.


நிகழ்வை வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார், குறித்த அங்குரார்ப்பண நிகழ்விற்கு வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததோடு இணையம் மூலமான முதலாவது வாகன வரி அனுமதிப்பத்திரத்தை வழங்கியும் வைத்தார்.

நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான க.தர்மலிங்கம், க.விந்தன், பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, வே.சிவயோகன், அரியரட்ணம் பசுபதி, எம்.தியாகராஜா, இரா.இந்திரராஜா, வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.தவராஜா, எஸ்.அகிலதாஸ் ஆகியோர் கலந்துகொண்டதோடு, வடக்கு பிரதி பிரதம செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், ICTA திணைக்கள பணிப்பாளர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர், அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் இலங்கையில் இறுதி மாகாணமாக எமது வடக்கிற்கு இந்த இலத்திரனியல் சேவை வழங்கப்பட்டிருந்தாலும் இந்த நாள் எமது மாகாணத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் அல்ல பிளாட்டினத்தால் பதிக்கப்படவேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்திருந்ததை தன்னுடைய செவிகள் கேட்டதாகவும் அவ்வாறாகவே தானும் எண்ணுவதாகவும் தெரிவித்தார். அத்தோடு இந்த இணைய வசதிமூலமாக எமது மக்களது நேர விரயமும், தேவையற்ற அலைச்சலும் குறைவடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும், எமது மாகாணத்தில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் வினைத்திறனுள்ளதாக, அபிவிருத்தியை நோக்கியதாக அமையவேண்டும் என்றும் அந்த வகையில் எனது அமைச்சு சார்ந்து நான் முன்னெடுக்கும் ஒவ்வொரு விடயங்களும் குறிப்பாக அது போக்குவரத்தோ அல்லது மோட்டார் போக்குவரத்துடனான விடயங்களோ தேவையாக இருப்பினும் எங்களால் கொண்டுவரப்படும் திட்டங்களை ஏனைய மாகாணங்கள் திரும்பிப்பார்க்கும் அளவிற்கு மிகவும் வினைத்திறனுள்ளதாக செய்வதையே தாம் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW