''ஹஜ் விவகாரம்'' சவூதிக்கு, ஈரான் விதித்துள்ள நிபந்தனை
ஹஜ் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் சவூதி அரேபியாவின் அழைப்பை ஏற்பதற்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இரு எதிரி நாடுகளுக்கும் இடையிலான மோதலால் கடந்த ஆண்டு ஈரான் மக்கள் ஹஜ் கடமையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
2017 ஹஜ் கடமை தொடர்பிலான விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் உட்பட 80க்கும் அதிகமான நாடுகளுக்கு சவூதி ஹஜ் அமைச்சர் முஹமது பென்தின் அழைப்பு விடுத்திருப்பதாக அல் ஹயாத் நாளிதழ் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் ஈரானின் ஹஜ் மற்றும் புனித யாத்திரை அமைப்புக்கு அல்லது வெளியுறவு அமைச்சுக்கு சவூதி அரேபியாவிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் கிடைக்கவில்லை என்று ஹஜ் அமைப்பின் தலைவர் ஹமித் மொஹமதி ஈரானிய ஊடகங்களுக்கு திங்களன்று கூறியிருந்தார்.
அழைப்பு கிடைத்தாலும் சவூதி தரப்பு பாதுகாப்பு மற்றும் கெளரவத்தை உறுதி செய்தாலேயே ஈரானால் பங்கேற்க முடியும் என்று மொஹமதி குறிப்பிட்டுள்ளார். முடக்கப்பட்ட வழியை திறந்து விடுவதற்கு ஈரான் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஹஜ் யாத்திரை, முடியுமான முஸ்லிம்கள் மேற்கொள்ளவேண்டிய கடமையாகும்.
2016 ஆம் ஆண்டு ஹஜ் கடமையில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் பங்கேற்றபோதும், மூன்று தசாப்தங்களில் முதல் முறை ஈரானியர் இடம்பெறவில்லை. 2015 ஹஜ் கடமையில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பில் சவூதியுடன் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே ஈரான், நாட்டு மக்களை ஹஜ் கடமைக்கு அனுப்பவில்லை.
இந்த நெரிசலில் அதிகப்படியாக 464 ஈரானியர் மரணித்தனர்.
சவூதி முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தால் 2016, ஜனவரியில் சவூதி ஈரானுடனான உறவை முறித்துக் கொண்டது.
ஷியா ஆதிக்க ஈரான் மற்றும் சுன்னி ஆதிக்க சவூதி பிராந்திய விவகாரங்களிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சிரியா மற்றும் யெமன் பிரச்சினைகளில் இரு நாடுகளும் பரஸ்பரஸ் எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவளித்து வருகின்றன.