குவைத் மரண தண்டனை: இரு பெண்களில் ஒருவர் ரிஸானா நபீக்கை ஞாபகப்படுத்துகிறார்.
இளவரசர் ஷேய்க் பைசல் அப்துல்லாஹ் அல் ஜாபிர் அல் சபா உட்பட ஏழு பேருக்கு குவைத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை வாசகர்கள் அறிந்ததே. அந்த ஏழு பேரில் குவைத்தைச் சேர்ந்த நஸ்ரா அல் என்சி என்ற பெண்ணும் பிலிப்பைனைச் சேர்ந்த ஜகாட்டியா பவா என்பவரும் அடங்குகின்றனர்.
குவைத் பெண்மணியான நஸ்ரா என்பவர் திருமணக் கொட்டகை ஒன்றுக்குத் தீ வைத்து, நாற்பதுக்கு மேற்பட்ட பெண்களும் சிறுவர்களும் மரணமடையக் காரணமாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்.
மற்றைய பெண்மணி பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜகாட்டியா பவா என்பவராகும். தனது எஜமானனின் பெண் குழந்தையைக் கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆயினும் அவ்வாறான ஒரு குற்றத்தைத் தான் செய்யவில்லையென்று ஜகாட்டியா பவா கடைசிவரை மன்றாடி வந்தார்.
ஏறத்தாழ சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பெண்மணியான ரிஸானா நபீக்கை ஜகாட்டியா ஞாபகப்படுத்துகின்றார். ஜகாடியாவின் மீதான குற்றச்சாட்டு அபாண்டமானதென்றும், அவரது வாக்குமூலத்தை மொழிபெயர்ப்பாளர் சரியாக மொழிபெயர்க்கவில்லையென்றும் பவாவின் சகோதரரான கேரி பவா ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஜகாட்டியாவின் சகோதரர் கேரி பவா பிலிப்பைன்ஸ் இராணுவத்தில் கெர்னலாகப் பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
