கட்டாருடனான உறவு துண்டிப்பு; ஐந்து வளைகுடா நாடுகள் நடவடிக்கை முள்ளிநியூஸ்

கட்டாருடனான உறவு துண்டிப்பு; ஐந்து வளைகுடா நாடுகள் நடவடிக்கை



கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து வந்த சவுதி அரேபியா – கட்டார் முறுகலின் பின்னணியில் ஐந்து வளைகுடா நாடுகள் தற்போது கட்டாருடனான உறவைத் துண்டித்துக்கொண்டுள்ளன.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, யெமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளே இவ்வாறு தமது உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளதுடன் எல்லையையும் மூடியுள்ளன.

எகிப்தின் இஹ்வான்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்த கட்டாருடன் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த முறுகல் நாளடைவில் ஈரான் ஆதரவு ஆயுத கும்பல்களுக்கு கட்டார் ஆதரவளிக்கிறது எனும் குற்றச்சாட்டு வரை நீண்டிருந்தது.

இந்நிலையில், அண்மையில் கட்டார் அமீர் ஈரானைப் போற்றிப் பேசியிருந்ததன் பின்னணியில் கட்டாரிலிருந்து இயங்கும் அல்ஜஸீரா உட்பட செய்தித்தளங்களுக்கு சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்திருந்தது. அத்துடன் கட்டாரின் தேசிய ஜும்மா பள்ளிவாசலான இமாம் அப்துல் வஹாப் பள்ளிவாசலின் பெயர் மாற்றப்பட வேண்டும் எனவும் அப்துல் வஹாபின் குடும்பத்துக்கும் கட்டாருக்கும் தொடர்பில்லையெனவும் சவுதி அரேபிய அரச குடும்பம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இவ்வாறு உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் கட்டார், தம் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW