உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் பிரதமர் பணிப்பு

டிசம்பர் மாதமளவில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவிருப்பதால் அதனை வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு அடிமட்டத்திலிருந்து தயாராக இருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வழமைக்கு மாறாக மத்திய செயற்குழவின் கூட்டம் மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்றிருந்தது. இதன்போது முதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இம்மாதம் 17ஆம் திகதியுடன் 40ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அதனை கொண்டாடும் வகையில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உறுப்பினர்கள் யோசனைகளை முன்வைத்தனர்.
அதனையடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் அதனை முன்னிட்டு விசேட கண்காசியொன்றை நடத்துவதற்கும் பாரியளவிலான கோலகலமாக கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்குமுரிய தயார்ப்படுத்தல் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து நீண்ட நேரம் ஆராயப்பட்டது. விசேடமாக எவ்வாறான தேர்தல் முறையை பின்பற்றுவது, கிராம மட்டத்திலிருந்து கட்சியை பலப்படுத்துதல், அபேட்சகர்கள் நியமனம், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பணிகள் உட்பட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூட்டு எதிரணியில் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே எமது கட்சி எந்தவிதமான குற்றங்களுடனும் தொடர்புடையவர்களை அபேட்சகர்களாக அங்கீகாரிக்க கூடாது என்ற யோசனையை முன்வைத்தார். அந்தயோசனையை மத்திய குழு உறுப்பினர்கள் ஏகமதாக ஏற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளது. எமது கட்சியின் அதரவாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அடிமட்ட களத்திலிருந்து பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளில் முழு மூச்சுடன் கட்சிக்கான அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இக்காலப்பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் வெளிநாட்டுப்பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான அவசியம் ஏற்படுமாயின் கட்சியின் அனுமதியைப் பெற்றே செல்ல வேண்டியது கட்டாயமாகும்.
இதுவரையில் எந்த முறையில் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை. இது குறித்து நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியுள்ளது. விரைவில் அந்தச் செயற்பாடுகள் தொடரப்படவுள்ளன. எவ்வாறாயினும் பழைய முறைமையில் தேர்தலொன்றுக்கு முகங்கொடுப்பதனையே எமது கட்சி அதிகம் விரும்புகின்றது என்றார்.
இதேவேளை கூட்டத்தின் நிறைவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெ ளியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம், நாம் தேர்தலுக்கான தயார்படுத்தல், கட்சித்தலைவரின் 40 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கை நிறைவு, கட்சியின் 70ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் குறித்து கலந்துரையாடினோம் என்றார்.
அதன்போது டிசம்பரில் தேசிய அரசாங்கத்திற்கான ஒப்பந்தம் நிறைவடைகின்றது. அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்.
தேசிய அரசாங்கத்தினை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாம் கலந்துரையாடியிருக்கவில்லை. எனினும் தேசிய அரசாங்கமாக தொடர்வதானால் அதற்கு எமது பங்களிப்பு இருக்கும். அதே நேரம் அவர்கள்(ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) விலக்கிச்செல்வதனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றினைக் கொண்டு செல்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ரமநாயக்க கருத்து வெளியிடுகையில், தேசிய அரசாங்கமாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.காரணம் தேசிய அரசாங்கம் நீக்கப்படுமாகவிருந்தால் ஊழல் மோடியைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சக்தி பெறுவார். மேலும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மகிந்த போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் அவர் இஸட்டிலிருந்து ஏ க்கு வருபவர் அல்ல. ஏ யிருலிருந்து இஸட்க்கு செல்பவர் என்றார்.