கட்டார் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மாற்றம்; UAE வரவேற்பு!
அரபு நாடுகளுக்கிடையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமரச முயற்சிகள் தொடர்ந்து வரும் நிலையில் தமது 13 அம்ச கோரிக்கையைத் திருத்தி ஆறு முக்கிய விடயங்களில் கட்டாரின் இணக்கப்பாட்டைக் கோரியிருந்தன கூட்டணி நாடுகள்.
இந்நிலையில், தமது நாட்டின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக கட்டார் அறிவித்துள்ளமையை வரவேற்றுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.
இதன் மூலம் கட்டாரில் அபயம் தேடியிருக்கும் முக்கிய தீவிரவாதப் போக்காளர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கையெடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என அமீரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இப்பிரச்சினையின் பின்னணியில் முதற்தடவையாக பகிரங்க உரை நிகழ்த்தியுள்ள கட்டார் அமீர், தமது நாட்டின் இறையான்மை கேள்விக்குட்படுத்தப்பட முடியாதது எனவும் அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பழிவாங்கப் பட விட முடியாது எனவும் பேச்சுவார்த்தை மூலமே பிணக்குகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இஹ்வான்கள் மற்றும் ஈரானுடன் இணைந்து பிராந்தியத்தில் தீவிரவாதம் பரவுவதற்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கும் கட்டார் உடந்தையாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கட்டார் தம்மை அர்ப்பணிக்கத் தயார் என தெரிவித்துள்ளதுடன் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளது.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்பின் வருகையின் பின்னணியில் உருவான இச்சர்ச்சைகளின் மத்தியில் சவுதி மற்றும் கட்டாருக்கு பல பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களையும் அமெரிக்கா விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.