கடத்திச் செல்லப்பட்ட கார் மோதியதில் 15 வயதான மாணவன் பலி முள்ளிநியூஸ்

கடத்திச் செல்லப்பட்ட கார் மோதியதில் 15 வயதான மாணவன் பலி



அநுராதபுரம், மகாஇலுப்பள்ளம பகுதியில் 15 வயதுடைய மாணவன் ஒருவரை மோதி விபத்திற்குள்ளாக்கிய கார் கடத்தப்பட்ட கார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருளுக்கு அடிமையான கணவனும் மனைவியும் இந்த காரை கடத்திச் சென்றுள்ளதுடன், கடத்தலை மேற்கொண்ட இளைஞன் காருடன் தப்பிச் செல்லும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (16) இந்த கார் கடத்தப்பட்டதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் குற்றப்பிரிவில் காரின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். 

“நேற்று (16) காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், அலைக்கம்பம் (Antenna)பொருத்த வேண்டும் கூறி தனக்கு அழைப்பு விடுத்ததாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

அதன்படி, பிற்பகல் 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடையில் அனுராதபுரம், யாழ்ப்பாணம் சந்திக்குச் சென்ற அந்த நபர், குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இதன்போது, அருகில் உள்ள ஒரு பக்க வீதிக்கு வருமாறு கூறியதாகவும், அதன் பிரகாரம், அவர் காரில் பக்க வீதிக்கு சென்ற போது, ஒரு இளம் ஜோடி காரில் ஏறியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரில் ஏறிய யுவதி தனது கைத்தொலைபேசி மற்றும் 3500 ரூபாவை எடுத்துச் சென்றதாகவும், அந்த இளைஞன் தனது கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து பணம் கேட்டதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

அச்சத்தில் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து உதவி கோரி சத்தம் போட்டதாகவும், அப்போது அந்த இளைஞன் காரை திருடிச் சென்றுள்ளார். அத்துடன், யுவதியும் ஓடிவிட்டதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW