வடக்கு-கிழக்கு இணைப்பை முஸ்லிங்கள் எதற்காக வெறுக்கின்றனர்?!
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவும் இந்திய அரசும் கைச்சாத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்நாட்டின் முஸ்லிம்களை கொஞ்சமும் கவனத்திற் கொள்ளவில்லை. தேசிய இன நெருக்கடியின் அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பரிமாணம் முஸ்லிம்கள் என்பதை அப்போதைய ஐ.தே.க. அரசாங்கம் பொறுப்புணர்வுடன் அணுகத் தவறியது.
அது வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தமது எதிர்கால இருப்பு பற்றிய பலத்த அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியது. அப்போதும் இலங்கைப் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள். ஆனால் ஐ.தே.கட்சி அதிகார ஜாம்பவான்களின் கைகளில் தொங்கும் பொம்மைகளாகவே அவர்கள் செயற்பட்டார்கள். வாய்பொத்தி மௌனம் காப்பதைத் தவிர வேறு எதனையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இத்தகைய கையாலாகத்தனமும் மெத்தனமான போக்கும் முஸ்லிம்களைப் பெருத்த நெருக்குதலுக்குள் தள்ளியது. முஸ்லிம்கள் அனேகம் இழக்க வேண்டிஏற்பட்டது. ஒரு பக்கம் தமிழ் ஆயுதக் குழுக்களின் அடக்குமுறைகள் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப்பட்டன. மற்றொருபுறம் இந்திய அமைதி காக்கும் படையினரின் வன்முறைகளையும் முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த இருள்மயமான வரலாற்றை இன்னொருமுறை முஸ்லிம்கள் நினைத்துப் பார்ககவே முடியாதளவு அது பயங்கரமானதாக இருந்தது.
1987 ஜூலை 29ல் ஜே.ஆர்-ராஜிவ் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக 1987 நவம்பர் 14ல் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாண சபை முறை அமுலுக்கு வந்தது. இணைந்த வட கிழக்கு உள்ளிட்ட ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இம் முறை சிபார்சு செய்யப்பட்டது. எனினும் மாகாண சபை முறை மூலம் வட-கிழக்கிற்குப் பகிரப்பட்ட அதிகாரங்கள் பெரும் பாலும் தமிழ் அரசியல் கட்சிகளிடமே கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் வடக்குக் கிழக்கு நிர்வாகக் கட்டமைப்பில் தமிழ் ஆதிக்கம் மேலோங்கியதோடு இன்றுவரை அதன் தாக்கம் தொடர்கின்றது. அப்போதைய வட கிழக்குக் கல்வி மற்றும் பொதுநிர்வாகங்கள் ஒட்டுமொத்த மாகவே தமிழ் சமூகத்தின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்து வந்தன. இந்த மாகாண சபை அதிகாரப் பரவலாக்கலின் பின்னணியிலேயே ஐ.தே.மு. அரசு உத்தேசித்திருந்த இடைக்கால நிர்வாக அதிகாரங்களையும் நோக்குதல் பொருந்தும் என்று நினைக்கின்றேன். தாய்லாந்துப் பேச்சுவார்த்தையில் இணைந்த வட-கிழக்கிற்கான இடைக்கால நிர் வாகம் குறித்தே தீவிரமாக பேசப்பட்டது. 1987 மாகாண சபை முறையில் மாகாண மட்டத்தில் எத்தகைய அதி காரங்கள் பரவலாக்கப்பட்டதோ அதே அதிகாரங்களே பெரும்பாலும் இடைக் கால நிர்வாகத்தின் கீழும் சிபார்சு செய்யப்பட்டிருந்தது!.
இத்தகைய சூழலில் இந்த அதிகாரங்கள் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினரால் பகிர்ந்து கொள்ளும் ஒன்றாகவும் முஸ்லிம்கள் மீது பிரயோகிக்கப் படும் அதிகாரங்களாகவும் இருந்து வந்தது. வட கிழக்கில் சுயநிர்ணய உரிமையும் அரசியல் தனித்துவமுமிக்க சக சிறு பான்மையினரும் இந்த அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான உறுதிப்பாடுகள் அரசால் வழங்கப் பட்டிருக்கவில்லை.
மாகாண சபை முறையின் கீழ் அளிக்கப்பட்ட அதே அதிகாரங்களே இடைக் கால நிர்வாகத்திற்கும் வழங்கப்படுமாயின் அது வட கிழக்கு முஸ்லிம்களை பெரும் நெருக்கடிகளுக்குள் தள்ளிவிடும் என்பதில் ஐயமில்லை. உள்ளூராட்சி, பொதுச் சேவை, கூட்டுறவு, பொலிஸ், கல்வி, கலாச்சாரம், பொது ஒழுங்கு, தெருக்கள், மட்டுப்பாடுகளுடனான காணி அதிகாரங்கள், தனியான நீதி ஆணைக்குழு, விளையாட்டு முதலிய 36 அதிகாரங்களும் ஒருங்கிணைந்த நிரலின் கீழ் மேலும் 36 அதிகாரங்களும் மாகாண சபையின் கீழ் சிபார்சு செய்யப்பட்டன. இவ்வதிகாரங்கள் கடந்த கால வரலாற்றில் முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளன. காணி, கல்வி, நிர்வாக உரிமைகளில் இப்புறக்கணிப்பை நன்கு அவதானிக்கலாம்.
முஸ்லிம்கள் அற்ற தூய தமிழ் தாயகத்தை உருவாக்குகின்ற முயற்சியில் புலிகளும் தமிழ்த் தலைமைகளும் தொடர்ந்தும் முனைப்போடு செயற்பட்டு வந்தனர் என்பதை கடந்த காலங்களில் கிழக்கில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் காட்டி நிற்கின்றன. வட மாகாண முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட இன சுத்திகரிப்பொன்றை கிழக்கு முஸ்லிம்கள் மீதும் நடாத்துவதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டதை நினைவு கூறலாம்.
இத்தகைய ஒரு சூழலில் அரசுக்கும் தமிழர்களுக்குமிடையில் முதன்மை பெறவுள்ள இடைக்கால நிர்வாகத்தின் அதிகாரம் குறித்தும் அதன் அபாயங்கள் குறித்தும் நாம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு சிந்திக்க வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத் தொகையில் முஸ்லிம்கள் 33 வீதமாக வுள்ளனர். இடைக்கால நிர்வாகத்தில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படுமானால் முஸ்லிம்களின் இனத்துவ விகிதாசாரம் 18 வீதமாகக் குறைக்கப்படும். இதனால் வடக்குக் கிழக்கில் தமிழ் ஆதிக்கம் மேலும் வலுவடைவதோடு முஸ்லிம்கள் மிகக் குறைந்த சிறுபான்மையாக மாற நேரிடுகின்றது. இணைப்பின் போது முஸ்லிம்களின் இன விகிதாசாரப் பிர திநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படலாம் என ஆறுதல் சொல்லப்பட்டாலும் தற்போதுள்ள தேர்தல் அமைப்பின் கீழ் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதுபோன்றே உத்தேச இடைக்கால நிர்வாகத்தில் வட-கிழக்கு முஸ்லிம்களின் இனத்துவ விகிதாசாரம் பேணப்படாத விடத்து காணி, கல்வி மற்றும் விவசாயத்துறை உரிமைகள் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் அபாயம் மேலும் கூர்மையடையவும் வாய்ப்புண்டு.
கடந்த கால வரலாற்றுப் பாடங்கள் இந்த உண்மையை உணர்த்தி நிற்கின்றன. எடுத்துக் காட்டாக 1981ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் 72.59 வீதமாகவும் (238,216) முஸ்லிம்கள் 24.17 வீதமாகவும் (79,317), சிங்களவர்கள் 3.24 வீதமாகவும் (10,646) வாழ்கின்றனர். எனினும் 2854 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட இம்மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக வெறும் 2.5 வீதமான நிலங்களே உள்ளன. 24 வீதமாகவுள்ள முஸ்லிம்களுக்கு வெறும் 2.5 வீதமான நிலங்களே பகிரப்பட்டுள்ளமை எதிர்காலத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட நில அதி காரங்களில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்படும் என்பதையே சுட்டி நிற்கின்றது.
இதுபோன்றே கல்வித்துறை நிர்வாகத்திலும் வட-கிழக்கு முஸ்லிம்கள் அதி கூடிய பாராபட்சத்திற்கும் புறக்கணிப்பிற்கும் உட்பட்டு வந்தனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக விளங்கும் தமிழ் அதிகாரிகளால் முஸ்லிம்களின் கல்வி உரிமைகள் திட்ட மிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்தன. இம்மாவட்டத்தில் சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள்.
மாவட்ட சனத்தொகை யில் 25% ஆகவுள்ள முஸ்லிம்கள் 28,000 மாணவர்களையும் 1000 ஆசிரியர்களையும் 70 முஸ்லிம் பாடசாலைகளையும் கொண்டுள்ளனர். எனினும் இப்பாடசா லைகளின் நிர்வாகத் தேவைகள் அனைத்தும் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா ஆகிய வலயக் கல்விப் பணிமனைகளின் மீதே தங்கியிருந்தன. கல்விப் பணிப்பாளர் முதல் சாதாரண இலிகிதர் வரை 80 வீத மான தமிழ் அதிகாரிகளின் ஆதிக்கத்தின் கீழ் இயங்கும் இப்பணிமனைகள் முஸ்லிம் பாடசாலைகளின் பௌதீக அபிவிருத்தியிலோ கல்வித்தர மேம்பாட்டிலோ போதிய அக்கறை காட்டவில்லை என்பது கசப்பான உண்மை.
கல்குடாவின் கீழ் இயங்கும் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பிரதேசப் பாடசாலைகளை விடுத்து நோக்கும்போது ஏறாவுர் , கத்தான்குடி போன்றவற்றை இணைத்து ஒரு பிரத்தியேக முஸ்லிம் கல்விப் பனி மணை உருவாக்கப்படுவது பற்றி பலதடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. எனினும் கல்வி நிருவாகத்துறையில் முஸ்லிம்களின் இக்கோரிக்கை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இத்தகைய புறக்கணிப்புகள் திருகோணமலை மாவட்டத்திலும் கணிசமானளவு நடைபெற்றன.
முஸ்லிம்களின் விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் கடந்த 20 க்கு மேற்பட்ட வருடகால ஆயுதப் போரின் விளைவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகள் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்து வந்தன. செய்கை பண்ணப்படாத இக்காணிகள் கைவிடப்பட்டுருந்ததால் முஸ்லிம்களுடைய பொருளாதாரம் பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வளமிக்க நெற்காணிகள் என்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்ததனால் கிழக்கு முஸ்லிம்களின் பொருளாதாரம் மிகவுமே பின்னடைந்திருந்தது.
எனவே, இடைக்கால நிர்வாக அதிகாரங்கள் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் தரப்பினருக்கு மாத்திரம் பகிரப்படுகின்றபோது முஸ்லிம்களின் எதிர்கால இருப்பு மென்மேலும் கேள்விக்குறியாகின்ற நிலையே தொடரப்போகின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
தொடரும்…..
இதனை நண்பர்களுடன் பகிரவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW