சுன்னாகம் வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் காயம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ரொட்டிலாலடி மருதனார்மடம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை குழுவாகச் சென்றவர்கள் அப்பகுதியில் மற்றொரு குழுவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வாளால் வெட்டி காயப்படுத்திச் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என கருதப்படும் மூவரை நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாள்வெட்டில் காயமடைந்த இருவர் தெல்லிப்பளை வைத்தியசாலையிலும் மற்றொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
வாள்வெட்டில் ஈடுபட்டவர்கள் என கைதுசெய்யப்பட்ட ஒருவர் யாழ்.நகரின் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் வர்த்தகப் பிரிவில் இம்மாதம் பரீட்சை எழுத உள்ளார்.
அண்மைக்காலமாக சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கென பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.